என் தமிழ்

தீபாவளியை முன்னிட்டு 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள், நல்வாழ்வு இல்லக் குழந்தைகளுக்கு டத்தோஸ்ரீ ரமணன் தலைமையில் மனிதவள அமைச்சு நிதியுதவி

புத்ராஜெயா, 18 நவம்பர் 2026 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 130-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள், நல்வாழ்வு இல்லக் குழந்தைகளுக்கு மனிதவள அமைச்சு நிதியுதவி வழங்கியது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில், கோலாலம்பூர் தம்பூசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், கருணை இல்லம், அன்பு இல்லம் ஆகிய நல்வாழ்வு இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகள் இந்த உதவியைப் பெற்றனர்.

விழாவில் உரையாற்றிய ரமணன், தீபாவளி போன்ற பண்டிகைகளின் மகிழ்ச்சியைச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக வசதி குறைந்த மாணவர்கள், நல்வாழ்வு இல்லக் குழந்தைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அமைச்சின் நோக்கம் என்றார்.

பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதோடு, சமூகத்தில் பின்தங்கியவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், மனிதவள அமைச்சின் உயர் அதிகாரிகள், மலேசிய இந்திய சமுதாய உருமாற்றப் பிரிவு (மித்ரா) நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் சமூக நலத் திட்டங்கள், சமூக முன்னெடுப்புகள் வெறும் நிகழ்வுகளாக மட்டுமின்றி, மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ரமணன் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டமும் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதுடன், குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குவதை உறுதி செய்வதில் அமைச்சு கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நாட்டின் பணியிடங்களில் பாலினப் பாகுபாடு, பாலின அடிப்படையிலான ஊதிய வேறுபாடுகளை மனிதவள அமைச்சு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று ரமணன் எச்சரித்தார்.

பாலின அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வேறுபட்ட ஊதியம் வழங்கும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் செய்தியாளர்ளிடம் கூறினார்.

அனைத்து முதலாளிகளும் நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்கள், விதிமுறைகள், தொடர்புடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பணியாளர்களின் கல்வித் தகுதி, பணியின் தன்மைக்கு ஏற்ப நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top