என் தமிழ்

சீனாவின் 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானம் : மனிதர்களுடன் முதல் சோதனைப் பயணம் வெற்றி

பெய்ஜிங், 17 நவம்பர் 2026 : சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானம், முதல் முறையாக மனிதர்களை ஏற்றிக்கொண்டு சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது சீன அரசுக்குச் சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான கோமாக் (COMAC), முன்னணி மின்கலத் தயாரிப்பு நிறுவனமான சி.ஏ.டி.எல் (CATL) மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து CE-25A என்ற மின்சார விமானத்தை உருவாக்கியுள்ளன.

இந்த விமானத்தின் சோதனை ஓட்டம், கடந்த சனிக்கிழமை கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பின்சோ நகரில் நடைபெற்றது. இந்தச் சோதனைப் பயணத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமானச் சோதனைப் பொறியாளர் என மொத்தம் மூவர் பயணித்தனர். 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நடைபெற்ற சோதனையின்போது, விமானம் 16 நிமிடங்கள் 38 விநாடிகள் வானில் பறந்து 60.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது.

விமானத்தின் அனைத்து அமைப்புகளும் சீராகச் செயல்பட்டதாக கோமாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 10 டன் எடை கொண்ட CE-25A விமானம், நகரங்களுக்கு இடையிலான குறுகிய தூரப் பயணங்களுக்காக 19 இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 400 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடியது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது முதல் ஆளில்லா சோதனைப் பயணத்தை மேற்கொண்ட இந்த விமானம், மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கு முன்பாக 19 தானியங்கி சோதனைப் பயணங்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது. இந்தச் சோதனைப் பயணத்தின் வெற்றி, வணிக ரீதியிலான மின்சார விமானப் போக்குவரத்துத் துறையில் சீனா எட்டியுள்ள முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Scroll to Top