என் தமிழ்

அமைச்சரவை மாற்றம் குறித்து அவசர முடிவு இல்லை : அரசாங்கம் நிலையாகச் செயல்படுகிறது – பிரதமர் அன்வார்

மணிலா, 17 நவம்பர் 2026 : அரசாங்கம் தொடர்ந்து நிலையாகச் செயல்பட்டு வருவதுடன், மக்களுக்கான பொறுப்புகளையும் கொள்கைகளையும் நிறைவேற்றுவதில் முழுக் கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் குறித்த ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான அவசரத் தேவை எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் கொள்கைகள் அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அன்வார், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் கருத்துப் பரிமாற்றம் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டிச் செயல்பட்டு வருவதாகக் கூறினார். இருதரப்பு உறவுகள், பலதரப்பு விவகாரங்கள் மற்றும் ஆசியான் தொடர்பான முக்கியப் பிரச்சினைகளிலும் இத்தகைய அணுகுமுறை பின்பற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முடிவு குறித்துப் பேசிய பிரதமர், கொள்கை அடிப்படையில் அவர் எடுத்துள்ள நிலைப்பாட்டை மதிப்பதாகக் கூறினார். முன்னதாக, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தாம் கேட்டுக்கொண்டபோதிலும், லோக் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார். எனினும், அவரது பதவி விலகலைத் தாம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சி நடைபெறும் நாடுகளில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அரசியல் நிலைப்பாடுகள் மாறுபடுவது இயல்பான ஒன்றுதான் என்றும் அன்வார் விளக்கமளித்தார்.

பிலிப்பைன்ஸ் தலைமையில் நடைபெறும் 49ஆவது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்களில் பங்கேற்பதற்காக, நவம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரை மலேசியக் குழுவுக்கு அன்வார் தலைமை தாங்கி மணிலாவில் உள்ளார்.

Scroll to Top