என் தமிழ்

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் : மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் அணி பிரிவில் இந்தியாவுக்குத் தங்கம்

புதுடெல்லி, 11 நவம்பர் 2026 : கத்தாரின் தோகா நகரில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஈஷா சிங், மனு பாக்கர், திவ்யா சுப்பராஜு ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி மொத்தம் 1,761 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. தென் கொரியா 1,748 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், வியட்நாம் 1,745 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இந்திய அணியில் ஈஷா சிங் சிறப்பாகச் செயல்பட்டு அதிகபட்சமாக 590 புள்ளிகளைக் குவித்தார். இதற்கிடையில், மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவின் தகுதிச்சுற்றில் ஈஷா சிங் மூன்றாவது இடத்தையும், மனு பாக்கர் ஆறாவது இடத்தையும் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். ஆனால், இறுதிச்சுற்றில் மனு பாக்கர் 27 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், ஈஷா சிங் 11 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும் பிடித்தனர். இதனால், இந்தப் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கவில்லை.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வருகின்றனர். மகளிருக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் தனிநபர் பிரிவில் நிவேதிதா நாயர் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஜெய்பால் மால்வியா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மேலும், ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் ரவீந்தர் சிங், சவுரப் சவுத்ரி, அமன்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. இதே பிரிவின் தனிநபர் போட்டியில் ரவீந்தர் சிங் வெள்ளிப் பதக்கம் பெற்றார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர், ஷாம்பவி க்ஷிர்சாகர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

Scroll to Top