என் தமிழ்

காடெக் தொகுதி மக்களைச் சந்தித்து தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கிய டத்தோஸ்ரீ எம். சரவணன், டி. மோகன்

மெலாக்கா, 11 நவம்பர் 2026 : மெலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதிகள், மக்களுக்கான சலுகைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்குவதற்காக, டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் டி. மோகன் ஆகியோர் காடெக் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாமான் புக்கிட் நானாஸ் பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களை நேரில் சந்தித்தனர்.

அப்போது, காடெக் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் நடராஜா செல்லப்பாவுக்கு மக்கள் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன், தேசிய முன்னணி ஆட்சிப் பொறுப்பேற்றால் செயல்படுத்தவுள்ள திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்களுக்கான சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவது மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட டி. மோகன், இதன் மூலம் பொதுமக்களின் கருத்துகளையும் குறைகளையும் நேரடியாகக் கேட்டறியவும், அவர்களின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொள்ளவும் முடியும் என்றார். மேலும், மக்களுடன் நெருக்கமாக இருப்பது, அவர்களின் குரலுக்குச் செவிசாய்ப்பது, சமூகத்தின் தேவைகளைப் புரிந்துகொள்வது ஆகியவையே மக்கள் சேவையின் அடிப்படை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top