என் தமிழ்

துருக்கியில் COP31 மாநாட்டையொட்டி மலேசிய அரங்கம் திறப்பு : பஹாங் சுல்தான், அரசியார் பங்கேற்பு

அந்தால்யா, 10 நவம்பர் 2026 : துருக்கியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 31ஆவது காலநிலை மாற்ற மாநாடான COP31-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள மலேசிய அரங்கத்தின் திறப்பு விழாவில் பஹாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துடீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பஹாங் அரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நவம்பர் 9ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பங்கேற்று, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கின்றனர்.

மலேசிய அரங்கம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் நாட்டின் முயற்சிகள் மற்றும் உறுதிப்பாடுகளை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்கும் தளமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கருத்துப் பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் இது ஏற்படுத்தும்.

பஹாங் சுல்தான் மற்றும் அரசியாரின் வருகை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பேணுதல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்கான அரண்மனையின் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்துவதாக பஹாங் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, ‘உலகளாவிய கழிவில்லா முன்னெடுப்பு’ (Global Zero Waste Alliance) இடம்பெறுகிறது. இதன் மூலம் நிலையான கழிவு மேலாண்மை மற்றும் சுழற்சிப் பொருளாதார நடைமுறைகளை விரிவுபடுத்துவதற்குப் பல்வேறு தரப்பினரிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.

Scroll to Top