என் தமிழ்

24ஆவது தீபாவளிக் கண்காட்சி பல்லின மக்களின் ஒற்றுமையையும் இந்தியக் கலாசாரத்தையும் பறைசாற்றுகிறது – யுனேஸ்வரன்

கோலாலம்பூர், 04 நவம்பர் 2026 : மலேசியாவின் பன்முகக் கலாசாரத்தையும் பல்வேறு இன மக்களிடையேயான நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில், புக்கிட் ஜலீலில் நடைபெற்ற 24ஆவது தீபாவளிக் கண்காட்சி 2026 சிறப்பாக அமைந்துள்ளதாக ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்தார்.

Agenda Suria Communication Sdn. Bhd. ஏற்பாட்டில் தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சி, இந்தியச் சமூகத்தின் பாரம்பரியம், கலாசாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவோர் திறன்களை ஒரே தளத்தில் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இக்கண்காட்சி இந்தியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி, பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்களையும் வெளிநாட்டுப் பயணிகளையும் ஒன்றிணைத்து, நாட்டின் தனித்துவமான பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இக்கண்காட்சி வெறும் வணிக நடவடிக்கைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்வாக இல்லாமல், இந்தியச் சமூகத்தின் கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரியக் கலைகள் மற்றும் பண்பாட்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறினார்.

இத்தகைய நிகழ்ச்சிகள் பல்வேறு இன மக்களிடையே பரஸ்பரப் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதுடன், சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து 24 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இக்கண்காட்சி, இந்தியச் சமூகத்தின் கலாசார அடையாளங்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதோடு, உள்ளூர் வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகள், சேவைகள் மற்றும் திறன்களைப் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த தளமாகவும் விளங்குவதாக ஆர். யுனேஸ்வரன் தெரிவித்தார்.

தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியையும் இந்தியக் கலாசாரத்தின் சிறப்பையும் பல்வேறு இன மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சி மலேசியாவின் சமூக நல்லிணக்கத்தையும் பன்முகக் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Scroll to Top