மலாக்கா, 02 நவம்பர் 2026 : மலாக்கா மாநிலத் தேர்தலில் மச்சாப் ஜெயா சட்டமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளர் கினி லிம்முக்கு ஆதரவு தெரிவித்து, ராமணன் ராமகிருஷ்ணன் தேர்தல் களத்தில் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மச்சாப் ஜெயா ஜாபெருன் வளாகத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் நிகழ்வின்போது, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடனும் குறிப்பாக மக்கள் நீதிக் கட்சியின் (PKR) தலைவர்களுடனும் இணைந்து, வேட்பாளர் எண் 2-இல் போட்டியிடும் கினி லிம்முக்கு முழு ஆதரவு அளிப்பதாக ராமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மச்சாப் ஜெயா தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கினி லிம், தொகுதி மக்களுடன் நீண்டகாலத் தொடர்பையும் அரசியல் அனுபவத்தையும் கொண்டவர் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அனுபவமும் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் அர்ப்பணிப்பும் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் பெரும் பலமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டணியின் ஒற்றுமை, தேர்தல் பணிக்குழுவினரின் ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் வாக்காளர்களின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் மச்சாப் ஜெயா சட்டமன்றத் தொகுதியை மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். “மலாக்கா நமது இல்லம்” என்ற உணர்வுடன், மாநிலத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







