வாஷிங்டன், 30 அக்டோபர் 2026 : சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் பழைய சூரிய மின் தகடுகளை அகற்றி, புதிய தகடுகளைப் பொருத்தும் பணியில் நாசா விண்வெளி வீரர் அணில் மேனன் மற்றும் கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜோஷுவா ஆகிய இருவரும் ஈடுபட்டனர்.
இந்தப் பணிக்காக அவர்கள் இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணியளவில் விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி, விண்வெளி நடை மேற்கொண்டனர். அப்போது நிலையத்தின் வெளிப்புறத்தில் இருந்த பழைய சூரிய மின் தகடுகளை அகற்றிவிட்டு, புதிய தகடுகளைப் பொருத்தினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆய்வுகள், உயிர் காக்கும் அமைப்புகள் மற்றும் பிற முக்கியச் செயல்பாடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சூரிய மின் தகடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதற்காகவே புதிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுவட்டப் பாதையில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையம், மணிக்கு சுமார் 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இது சுமார் 90 நிமிடங்களில் பூமியை ஒருமுறை சுற்றி வருகிறது.
விண்வெளி நிலையத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்வதற்கும், பழுதடைந்த பாகங்களை மாற்றுவதற்கும் விண்வெளி வீரர்கள் சில நேரங்களில் நிலையத்திற்கு வெளியே சென்று பணியாற்ற வேண்டியுள்ளது. இவ்வாறு விண்வெளியில் மிதந்தபடி மேற்கொள்ளப்படும் பணிகள் ‘விண்வெளி நடை’ (Spacewalk) என அழைக்கப்படுகின்றன. இந்தச் சூரிய மின் தகடுகளைப் பொருத்தும் பணிகள் தொடர்பான காணொளிக் காட்சிகளையும் நாசா வெளியிட்டுள்ளது.







