என் தமிழ்

தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் குடியிருப்பாளர் சங்கம் ஏற்பாட்டில் இந்திய பலகாரங்கள் தயாரிப்புப் பயிலரங்கம் : பெண்களுக்கு வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட வாய்ப்பு

காஜாங், 26 அக்டோபர் 2026 : இந்தியர்களின் பாரம்பரிய உணவுப் பண்பாட்டைப் பாதுகாப்பதுடன், பெண்கள் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் குடியிருப்பாளர் சங்கம் சார்பில் Indian Cookies Extravaganza எனும் பாரம்பரிய இனிப்புகள் தயாரிப்புப் பயிலரங்கம் நடைபெற்றது.

காஜாங், தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் பலாய் ராயாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கெட்டி உருண்டை, அதிரசம், சிட்டு உருண்டை, எள்ளு உருண்டை உள்ளிட்ட பாரம்பரிய பலகாரங்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. திருமதி கலைச்செல்வி பயிற்சிகளை நடத்தினார். நிகழ்ச்சியை திருமதி வசந்தா ஒருங்கிணைத்து நிர்வகித்தார்.

இந்நிகழ்ச்சியை காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அப்போது, பாரம்பரிய உணவு வகைகளைப் பாதுகாப்பதுடன், பெண்களுக்குத் தொழில் திறன்களை வழங்கும் இத்தகைய நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பாரம்பரிய பலகாரங்கள் தயாரிக்கும் திறனைக் கற்றுக்கொள்வதன் மூலம் பெண்கள் சிறு தொழில்களைத் தொடங்கி, வீட்டிலிருந்தே கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் முத்து ரெத்தினம் ஆதரவுடன் நடைபெற்ற இப்பயிலரங்கம், பாரம்பரிய உணவு தயாரிப்பு முறைகளை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதுடன், பெண்களின் தொழில்முனைவு திறன்களை வளர்ப்பதற்கும் உதவும் வகையில் அமைந்தது.

Scroll to Top