என் தமிழ்

கிராமப்புற வருமானத்தை உயர்த்த ஹோம்ஸ்டே குடில்கள்: யுனேஸ்வரன் ராமராஜ் திறந்து வைத்தார்

கோலாலம்பூர், 23 அக்டோபர் 2026 : மலேசியாவின் கம்போங் குடாங் காராம் கிராமத்தில், மத்திய அரசின் சேஜாதி மடானி (SejaTi MADANI) திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஹோம்ஸ்டே குடில்களை யுனேஸ்வரன் ராமராஜ் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இத்திட்டத்தை அக்கிராமத்தின் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழு (JPKK) முன்னெடுத்துள்ளது.

கிராம மக்களின் நலனுடன், அவர்களுக்கான வருமான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக யூனேஸ்வரன் தெரிவித்தார். ஹோம்ஸ்டே வசதிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், கிராமக் குழுவுக்குத் தொடர்ச்சியான வருமானத்தையும் உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சேஜாதி மடானி என்பது மத்திய அரசின் சமூக மேம்பாட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சமூகங்கள் தங்களது பகுதியின் வாய்ப்புகளுக்கு ஏற்ப பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்த அதிகபட்சம் RM100,000 வரை மானியம் பெறலாம். விவசாயம், சேவைகள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் திட்டங்களை முன்னெடுக்க இது உதவுகிறது.

கிராம மக்களே தங்களது தேவைகளையும் வாய்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம், நீண்டகால வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தை முன்னெடுத்த கிராமத் தலைவர் மற்றும் JPKK குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த யூனேஸ்வரன், கிராமப்புற மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தும் சேஜாதி மடானி திட்டத்தைச் செயல்படுத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

Scroll to Top