கோலாலம்பூர், 17 அக்டோபர் 2026 : மலேசியாவின் இலக்கவியல் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என மலேசிய இலக்கவியல் பொருளாதாரக் கழகத்தின் (MDEC) தலைவர் கணேஷ் குமார் பங்கா தெரிவித்துள்ளார்.
LEVEL UP KL 2026 நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் பேசிய அவர், மனிதர்களின் படைப்பாற்றலையும் AI தொழில்நுட்பத்தையும் இணைப்பதன் மூலம் விளையாட்டு உருவாக்குநர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், உலகச் சந்தையில் போட்டியிடவும் முடியும் என்றார்.
மேலும், விளையாட்டு உருவாக்க நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு National AI Compute Exchange (NACX) திட்டத்தின் மூலம் எவ்வாறு உதவ முடியும் என்பதை MDEC ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, LEVEL UP KL 2026 நிகழ்ச்சியில் திறமையாளர்களுக்கு வழிகாட்டுதல், படைப்புகளின் மதிப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகளை வழங்குவதற்காகச் சிறப்பு Talent Hub மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு நிகழ்ச்சியின் மூலம் 400 வணிகச் சந்திப்புகளை நடத்துவதுடன், RM120 மில்லியன் மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்புகளையும் RM100 மில்லியன் மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகளையும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







