என் தமிழ்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு வீட்டு ஏலம், கடன் சுமை குறித்த அச்சம் – MASFIH கவலை

கோலாலம்பூர், 17 அக்டோபர் 2026 : நேபாளம்–திபெத் வெள்ளப் பேரிடரில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்கள் கடன் சுமை, வீடுகளை இழக்கும் அபாயம், வேலை மற்றும் வருமானம் குறித்த நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதாக MASFIH அமைப்பு தெரிவித்துள்ளது. பேரிடர் நிகழ்ந்து 53 நாட்கள் கடந்தும், குடும்பங்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் குறித்த தகவலுக்காகக் காத்திருப்பதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் கூறினார்.

மாயமான மலேசிய தீயணைப்புப் படை வீரர் முகமது சானி பின் ஹருலின் மனைவி அஸீலா, வீட்டுக் கடன் தொடர்பாக LPPSA அலுவலகத்தை அணுகியபோது, வீடு ஏலம் விடப்படுவது குறித்த பேச்சு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக MASFIH தெரிவித்தது. இதனால், அவரது வீட்டுக் கடனுக்கான காப்பீடு அல்லது தகாஃபுல் பாதுகாப்பை ஆய்வு செய்து, குறைந்தது ஆறு மாதங்களுக்கு வட்டி, அபராதம் மற்றும் கூடுதல் கட்டணமின்றி தவணைகளை ஒத்திவைக்கவும், ஏல நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தவும் அமைப்பு கோரியுள்ளது.

UOB வங்கியின் கடன் அட்டைத் தவணை ஒத்திவைப்புக் காலத்திலும் வட்டி தொடரக்கூடும் என்ற தகவலுக்கும் MASFIH கவலை தெரிவித்தது. கடன் அதிகரிப்பதைத் தவிர்க்க வட்டியையும் பிற கட்டணங்களையும் நிறுத்த வேண்டும் என்றும், மாயமானவர்களின் கடன்கள் தொடர்பாக குடும்பத்தினருக்கு எழுத்துப்பூர்வ விளக்கம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மேலும், மாயமானவர்களின் வேலை, ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான உரிமைகள் குறித்து மனிதவள அமைச்சகம் (KESUMA) தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனக் கோரியது. 54 குடும்பங்களின் சட்டநிலை, சொத்துகள் மற்றும் நிதிப் பொறுப்புகள் குறித்து விளக்குவதற்காக அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (AGC) குடும்பங்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் பிரதமருடனான சந்திப்பை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

வங்கிகளின் உதவி தொடர்பாக, HSBC, Public Bank மற்றும் AmBank எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் வழங்கியுள்ளதாகவும், Maybank மற்றும் CIMB ஆகியவை வாய்மொழியாகத் தகவல் அளித்துள்ளதாகவும் MASFIH தெரிவித்தது. இரு வங்கிகளிடமிருந்தும் எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலை எதிர்பார்ப்பதாகக் கூறியது.

மாயமானவர்களின் குடும்பங்கள் கடனைச் செலுத்த மறுப்பவர்கள் அல்ல; தங்களின் அன்புக்குரியவர்கள் குறித்த உறுதிப்பாட்டிற்காகக் காத்திருப்பவர்கள் என்று குறிப்பிட்ட MASFIH, அரசு அமைப்புகளும் நிதி நிறுவனங்களும் விரைந்து நடவடிக்கை எடுத்து குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

Scroll to Top