கோலாலம்பூர், 17 அக்டோபர் 2026 : மலேசியாவில் நிலவும் மூடுபனி மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பள்ளி வளாகங்களில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் வலையமைப்பை உருவாக்க வேண்டும் என மலேசியா ககாசான் மன்றத்தின் (Majlis Gagasan Malaysia) தலைவர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள SMK Aminuddin Baki பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் மூடுபனி தென்படுவதுடன், புகை நாற்றமும் வீசுவதாகக் குறிப்பிட்ட அவர், அருகிலுள்ள கண்காணிப்பு நிலையங்களின் காற்றுத் தரக் குறியீடு (IPU) மட்டுமே பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைத் தீர்மானிக்கப் போதுமானதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு, பத்து மூடா பகுதியில் IPU 170 ஆகவும், செராஸ் பகுதியில் 168 ஆகவும் பதிவானதாக அவர் குறிப்பிட்டார். இவை ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுகளாகும்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிகளுக்கு அருகில் PM2.5 நுண்துகள்களைக் கண்காணிக்கும் கருவிகளை நிறுவுதல், பொதுமக்கள் தரவுகளை எளிதில் அணுகும் வகையில் இணையவழி தகவல் பலகையை உருவாக்குதல், வகுப்பறைகளுக்குள் மாசுபட்ட காற்று நுழைவதைக் குறைப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர் முன்மொழிந்துள்ளார்.
மேலும், காற்றின் தரம் மோசமடையும் சூழலில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தெளிவான நடைமுறைகளை வகுக்கவும், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படும் நிலை ஏற்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் மாற்று கற்றல் வசதிகளை ஏற்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் உடல்நலத்தையும் கல்வித் தொடர்ச்சியையும் பாதுகாக்க, பள்ளிகளில் காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







