என் தமிழ்

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு கடன் நிவாரணம் வழங்க வங்கிகள் உறுதி

கோலாலம்பூர், 12 அக்டோபர் 2026 : நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்குப் பேரிடலில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், கடன் தவணைகளைத் தற்காலிகமாக ஒத்திவைப்பது உள்ளிட்ட உதவிகளை வழங்க வங்கிகள் கொள்கையளவில் முன்வந்துள்ளன. மேலும், நிலுவைக் கடன்களைச் செலுத்தக் கோரி குடும்பங்களுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருப்பதற்கும் வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய ஒற்றுமை அமைப்பான மாஸ்பிஹ் (MASFIH) தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பப் பிரதிநிதிகள், மலேசிய மத்திய வங்கியை (BNM) கோலாலம்பூரில் சந்தித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி மற்றும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதித்தனர்.

இந்தச் சந்திப்பு சாதகமாக அமைந்ததாக மாஸ்பிஹ் அமைப்பின் பேச்சாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார். பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் திருப்பிச் செலுத்துதலைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது, கடன் வசூல் நடவடிக்கைகளை ஒத்திவைப்பது உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதற்குக் கொள்கையளவில் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பில், “சிறப்பு மனிதாபிமான நிதி நிவாரணம், கடன் பொறுப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தல், சொத்துப் பாதுகாப்பு மற்றும் தொழில் தொடர்ச்சிக்கான கட்டமைப்பு” என்ற தலைப்பிலான 35 பக்க முன்மொழிவை மலேசிய மத்திய வங்கி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் சமர்ப்பித்ததாக மணிவண்ணன் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் கடனைச் செலுத்த இயலாதவர்கள் என்பதற்காக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும், அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீடுகளை அணுக முடியாத நிலையே முக்கியப் பிரச்சினை என்றும் அவர் விளக்கினார். காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாததால், அவர்களின் நிதி விவகாரங்களை நிர்வகிப்பதில் குடும்பத்தினர் சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

கடன் தவணைகளை ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்கு ஒத்திவைப்பது மட்டுமே போதுமானதல்ல என்றும் மணிவண்ணன் சுட்டிக்காட்டினார். அந்தக் காலத்தில் வட்டி தொடர்ந்து சேர்வது, அபராதங்கள் விதிக்கப்படுவது அல்லது கடன் காலம் நீட்டிக்கப்படுவது போன்றவை குடும்பங்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றார். எனவே, வட்டி, அபராதம் மற்றும் கடன் கால நீட்டிப்பு உள்ளிட்ட அம்சங்களையும் கருத்தில் கொண்டு முழுமையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மலேசிய மத்திய வங்கி ஐந்து பிரதிநிதிகளை நியமிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், காணாமல் போனவர்களின் நிலை உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களின் உறவினர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு நிதித் தகவல்களைப் பெறுவதற்கான சட்ட வழிமுறைகளை ஆராயுமாறு மலேசிய சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தை (AGC) மாஸ்பிஹ் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, காணாமல் போனவர்களின் மத்திய கடன் தகவல் குறிப்பு முறைமை (CCRIS) பதிவுகளை அணுகுவதற்கான நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரிடல் 48-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தங்களின் அன்புக்குரியவர்களின் நிலை குறித்த தெளிவான தகவல் இல்லாமல் குடும்பங்கள் தவித்து வருகின்றன. அதேவேளையில், கடன் பொறுப்புகள் மற்றும் அன்றாட நிதித் தேவைகளையும் அவர்கள் நிர்வகிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

கடந்த அக்டோபர் 3ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ நிதிச் சேவை நிறுவனங்கள் தயாராக இருப்பதாக மலேசிய மத்திய வங்கி தெரிவித்திருந்தது. சட்ட நடைமுறைகள் முடிவடையும் வரை கடன் தவணைகளை ஒத்திவைத்தல், கட்டணங்கள் மற்றும் சேவைக் கட்டணங்களில் விலக்கு அளித்தல், ஆவணங்கள் தொடர்பான தேவைகளில் தற்காலிகத் தளர்வுகளை வழங்குதல் போன்ற உதவிகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி, திபெத்தில் உள்ள லெந்தே கோலா ஆற்றின் மேல்பகுதி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பனிக்கட்டி மற்றும் பாறைகள் சரிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தப் பேரிடலில் 1,450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன 54 மலேசியர்களின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Scroll to Top