கெடா, 11 அக்டோபர் 2026 : மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் சுங்கை பட்டாணி அருள் நிலையம் சார்பில், 44-ஆம் ஆண்டு நவசக்தி நவவிழாவை முன்னிட்டு பக்திப் பாடல் காணொளிப் போட்டி நடத்தப்படவுள்ளது.
சிறுவர்கள், பதின்ம வயதினர் மற்றும் பெரியவர்கள் என மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது. 12 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்கள் பிரிவிலும், 13 முதல் 19 வயது வரையிலானவர்கள் பதின்ம வயதினர் பிரிவிலும், 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பெரியவர்கள் பிரிவிலும் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்பவர்கள் குறைந்தது மூன்று நிமிடங்கள் கொண்ட பக்திப் பாடலைத் தெளிவான காணொளியாகப் பதிவு செய்து வாட்ஸ்அப் வழியாக அனுப்ப வேண்டும். காணொளிகளை அனுப்புவதற்கான இறுதி நாள் அக்டோபர் 12-ஆம் தேதியாகும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஐந்து காணொளிகள், நவசக்தி நவவிழாவின் மூன்றாம் நாளான அக்டோபர் 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ஆலய மண்டபத்தில் திரையிடப்படும்.
நேரில் வந்து பரிசுகளைப் பெற இயலாதவர்களுக்கு அவை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். போட்டியில் பங்கேற்கவும் கூடுதல் விவரங்களைப் பெறவும் திரு. அரசனை 011-12813901 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இளம் தலைமுறையினரின் பக்தியையும் கலைத் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இப்போட்டியில், தகுதியுடைய அனைவரும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.








