கோலாலம்பூர், 10 அக்டோபர் 2026 : டத்தோ ரத்தினத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ‘Resting Sun’ நூல் இன்று வெளியிடப்பட்டதாக டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பால் கோடீஸ்வரராக உயர்ந்து, இன்று சமூகத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் டத்தோ ரத்தினத்தின் வாழ்க்கைப் பயணம் வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூல் ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; மலேசிய இந்தியர்களின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றைப் பதிவு செய்யும் ஆவணமாகவும் அமைகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
“வரலாறுகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், நாம் என்ன செய்தோம் என்ற கேள்வியை எதிர்காலத் தலைமுறையினரும் நம்மைப் பற்றி அறியாதவர்களும் எழுப்புவார்கள்,” என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
வெற்றி என்பது தற்செயலாகக் கிடைப்பதல்ல என்பதை டத்தோ ரத்தினத்தின் வாழ்க்கை உணர்த்துவதாகக் குறிப்பிட்ட டத்தோஸ்ரீ எம். சரவணன், இந்த நூலில் அவர் பட்டியலிட்டுள்ள 27 வகையான தொழில்கள் அவரது அசாதாரண உழைப்புக்குச் சான்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷமாக இந்த நூல் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.







