புத்ராஜெயா, 10 அக்டோபர் 2026 : பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டிப்பதிலும், மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதிலும் மலேசியாவும் எகிப்தும் தங்களது கூட்டு நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் எகிப்து ஆற்றிவரும் முக்கியப் பங்கிற்கு மலேசியாவின் நன்றியைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு, பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கு வழிவகுத்துள்ளதாகவும், குறிப்பாக காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களைக் குறைக்க உதவியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான மலேசியாவின் பல்வேறு முயற்சிகளுக்கு எகிப்து ஆதரவளித்து வருகிறது. எகிப்து மேற்கொண்டு வரும் பெரிய அளவிலான முயற்சிகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், எகிப்தின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறோம்,” என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் உள்ள செரி பெர்டானா வளாகத்தில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், காசாவில் காயமடைந்த பாலஸ்தீன மக்களை எகிப்து தனது நாட்டிற்கு அழைத்து வந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளிலும் மலேசியா ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக எகிப்து அதிபர் அலுவலகம் மற்றும் அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதிலும், மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.







