கோலாலம்பூர், 09 அக்டோபர் 2026 : டேலண்ட்கார்ப் (TalentCorp) ஏற்பாட்டில் நடைபெற்ற ‘மைவாரம் மைபகாட் 2026’ நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்ததில் பெருமையடைவதாக ராமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள், வேலை தேடுவோர், முதலாளிகள், தொழில்துறைப் பிரதிநிதிகள் மற்றும் கல்வி, பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாட்டின் திறமையாளர்களை மேம்படுத்தும் சூழலை ஒருங்கிணைப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பசுமைப் பொருளாதாரம் ஆகியவை வேலைவாய்ப்புத் துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மலேசிய மக்கள் இந்த மாற்றங்களில் பின்தங்கிவிடக் கூடாது என அவர் வலியுறுத்தினார். தொழில்துறையின் மாற்றங்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் அதிகமான மக்கள் தரமான வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதனிடையே, டேலண்ட்கார்ப் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு முக்கிய முயற்சிகளையும் அவர் வரவேற்றார். தேசிய அளவிலான திறன் தயார்நிலை மற்றும் திறமையாளர்களின் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்கான ‘மைடிஆர்ஐ’ (MyTRI), தொழில்துறையின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப திறமையாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ‘மைபிக்’ (MyBIG) ஆகியவை அவற்றில் அடங்கும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி வலியுறுத்துவது போல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு மேம்பட்ட வேலைவாய்ப்புகளாகவும் அதிக வருமானமாகவும் மாற வேண்டும் என்றும் ராமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்கான பணியாளர்களை மட்டும் உருவாக்குவது போதாது என்றும், தொழில்துறையால் அதிகம் விரும்பப்படும், நியாயமான ஊதியம் பெறும் மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய மலேசியத் திறமையாளர்களை உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மைபகாட் 2026 நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த டேலண்ட்கார்ப் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்த முயற்சி அனைத்து மலேசியர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஊக்கியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.







