கோலாலம்பூர், 09 அக்டோபர் 2026 : மலேசியாவில் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளடக்கிய வகையில் மேம்படுத்துவதற்கு, டிஜிட்டல் அமைச்சு தேசிய அளவிலான அணுகுமுறையை முன்னெடுத்து வருவதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் வசதிகளை விரிவுபடுத்துதல், விழிப்புணர்வை அதிகரித்தல், தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகிய மூன்று முக்கியத் தூண்களின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், இளைஞர்கள், சமூகத்தினர் மற்றும் கிராமப்புற மக்களுக்கும் டிஜிட்டல் திறன்களைக் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கமாகும்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஹோங் பிங், உயர்திறன் கொண்ட டிஜிட்டல் பணியாளர்களை உருவாக்க அமைச்சு மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சு, தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப உயர்திறன் கொண்ட டிஜிட்டல் பணியாளர்களை உருவாக்குவதற்கான வழிகாட்டியாக தேசிய டிஜிட்டல் திறன் கட்டமைப்பை (National Digital Talent Framework) உருவாக்கி வருவதாகத் தெரிவித்தது.
இந்தக் கட்டமைப்பில் திறமையாளர்களை ஈர்த்தல் (Attract), திறன்களை வளர்த்தல் (Nurture), தக்கவைத்தல் (Retain), பணிகளில் ஈடுபடுத்துதல் (Deploy) ஆகிய நான்கு முக்கிய உத்திகள் இடம்பெறுகின்றன. மேலும், தொழில்துறைக்கான மைமாஹிர் தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றம் (MyMAHIR-NAICI) மற்றும் டிஜிட்டல் பீப்பிள் இணையவாயில் (Digital People Portal) ஆகிய முயற்சிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் உலகளாவிய போட்டித்தன்மையுடன் விளங்கும் டிஜிட்டல் தலைவர்களின் தலைமுறையை உருவாக்குவதும், நாட்டின் டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவதும் இந்த முயற்சிகளின் முக்கிய நோக்கங்களாகும்.







