என் தமிழ்

மலேசிய இந்து சங்கம் மற்றும் இந்துதர்ம மாமன்றம் ஏற்பாட்டில் நவராத்திரி விழா 2026 : அக்டோபர் 11 முதல் 19 வரை

கோலாலம்பூர், 08 அக்டோபர் 2026 : மலேசிய இந்துதர்ம மாமன்றம் ஏற்பாட்டில் 2026ஆம் ஆண்டுக்கான நவராத்திரி விழா அக்டோபர் 11 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீ பராபவ வருடம், கலியுகம் 5127-ஐ அடிப்படையாகக் கொண்டு, ஜோதிடர் ரத்ன மணி முத்துசாமி ஐயா அவர்களின் ஸ்ரீ கஜலட்சுமி வாக்கிய பஞ்சாங்கக் கணக்கீட்டின்படி இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவராத்திரி விழாவின் முதல் மூன்று நாட்களான அக்டோபர் 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் ஸ்ரீ துர்கா தேவியும், அக்டோபர் 14, 15 மற்றும் 16ஆம் தேதிகளில் ஸ்ரீ மகாலட்சுமி தேவியும், அக்டோபர் 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் ஸ்ரீ சரஸ்வதி தேவியும் வழிபடப்பட உள்ளனர்.

நவராத்திரியின் 10ஆம் நாளான அக்டோபர் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நடைபெறும். அன்றைய சூரிய உதய நேரத்தில் நவமி திதி நிலவுவதால், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை காலை நேரத்தில் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளின் மாலை விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. மகிஷாசுரமர்த்தினி தேவியின் வெற்றியை நினைவுகூரும் வகையிலும், குழந்தைகள் தங்களது கல்வியைத் தொடங்கும் சுபநிகழ்வான வித்யாரம்பம் நிகழ்வாகவும் விஜயதசமி அனுசரிக்கப்படுகிறது.

மேலும், அக்டோபர் 20ஆம் தேதி இரவு முழுவதும் தசமி திதி நிலவுவதால், கோயில் மரபு மற்றும் ஆகம விதிகளின்படி அன்றிரவு அம்பு விடுதல் நிகழ்வை நடத்துவது திதி அடிப்படையில் சரியானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அனைவரும் நவராத்திரி விழாவை பக்தியுடன் அனுசரித்து, அம்பாள் தேவியின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு மலேசிய இந்துதர்ம மாமன்றம், மலேசிய இந்து சங்கம், மலேசிய அர்ச்சகர் சங்கம் மற்றும் மலேசிய குருக்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.

Scroll to Top