உக்ரைன், 08 அக்டோபர் 2026 : உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட 12 பகுதிகளை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்களில் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் பிராந்தியத்தில் உள்ள பிரிலுகி நகரில் குடியிருப்புக் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் 4 குழந்தைகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கீவ் உள்ளிட்ட பிற நகரங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி, ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.







