கோலாலம்பூர், 06 அக்டோபர் 2026 : 2030-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு (AI) நாடாக உருவாக்கும் முயற்சியில் இந்திய சமூகமும் தீவிரமாக பங்கேற்று, எதிர்காலத்துக்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அழைப்பு விடுத்துள்ளார்.
டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைந்து மித்ரா ஏற்பாடு செய்த ‘AI (Advance Level), Rakyat MADANI’ நிகழ்ச்சி, இந்திய சமூகத்தினர் AI மற்றும் எதிர்காலத் திறன்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சமூகத்தை டிஜிட்டல் வளர்ச்சியில் மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான MADANI சாதன உதவித் திட்டத்தின் கீழ் RM13.2 மில்லியன் ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் நவீன சாதனங்களைப் பயன்படுத்தி கல்வி கற்க உதவி வழங்கப்படுகிறது.
மேலும், தேசியவகை தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் சூழலை நவீனப்படுத்தும் வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான SJKT ICT உபகரணங்கள் (Smart Board) திட்டத்துக்கு RM5.3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
B40 மற்றும் M40 பிரிவுகளைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் Uyarvu MADANI Startup Accelerator திட்டத்தின் கீழ் RM25 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
AI மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து கற்றுக்கொள்வது, அறிவைப் பகிர்ந்துகொள்வது மற்றும் முன்னேற்றமான சிந்தனையுடன் செயல்படுவது அவசியம் என்றும் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார். மலேசியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவருக்கும் பங்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







