ஜகார்த்தா, 06 அக்டோபர் 2026 : FIFA ஆசியான் கோப்பை 2026 தொடரின் 3-வது இடத்துக்கான போட்டியில் வியட்நாமை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணிக்கு எதிரான வெற்றியைப் பதிவு செய்தது.
ஜகார்த்தாவில் உள்ள கெலோரா புங் கர்னோ (GBK) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாற்று வீரராக களமிறங்கிய பெர்கஸ் டியர்னி 62-வது நிமிடத்தில் அடித்த ஒரே கோல் மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் டான் செங் ஹோ தலைமையிலான மலேசிய அணி தொடரில் 3-வது இடத்தைப் பிடித்தது.
மலேசியா கடைசியாக 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியான் கோப்பை அரையிறுதியில் வியட்நாமை வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வியட்நாமை வென்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் வியட்நாம் அதிக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடர் தாக்குதல்களை மலேசியாவின் தற்காப்பு வீரர்களும், கோல் கீப்பர் அகமது சியான் ஹஸ்மியும் சமாளித்தனர்.
39-வது நிமிடத்தில் மலேசியாவுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெர்க்சன் டா சில்வா வியட்நாம் வீரரைத் தாண்டி முன்னேறி அடித்த பந்தை, வியட்நாம் கோல் கீப்பர் பாட்ரிக் லீ ஜியாங் தடுத்து நிறுத்தினார்.
முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் வியட்நாமின் என்கோ டாங் கோவா தொலைவில் இருந்து அடித்த பந்து, மலேசியாவின் கோல் கம்பத்திற்கு சற்று விலகிச் சென்றது.
இரண்டாவது பாதியிலும் வியட்நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. 57-வது நிமிடத்தில் வில்லியம்ஸ் மின் ஹோவாங் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு சற்று வெளியே சென்றது.
இதையடுத்து 62-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய பெர்கஸ் டியர்னி மலேசியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். மானுவல் ஹிடால்கோவிடம் இருந்து பந்தைப் பெற்ற அவர், வேகமாகத் திரும்பி வலுவாக அடித்த பந்து வியட்நாம் கோல் கீப்பரைத் தாண்டி வலைக்குள் சென்றது.
அதன்பின்னர் மலேசிய அணி தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாகப் போராடியது. ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வியட்நாம் மேற்கொண்ட முயற்சிகளையும் அகமது சியான் ஹஸ்மி மற்றும் மலேசிய தற்காப்பு வீரர்கள் முறியடித்தனர்.
இதன் மூலம் மலேசியா கோல் ஏதும் விட்டுக்கொடுக்காமல் போட்டியை முடித்து, தொடரில் 3-வது இடத்தைப் பெற்றது. இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை குறுகிய வித்தியாசத்தில் தவறவிட்டிருந்த மலேசிய அணிக்கு இந்த வெற்றி தொடரை சாதகமான முறையில் நிறைவு செய்ய உதவியது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 2027 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் மலேசியா வியட்நாமை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. ஆனால், மலேசிய அணியைச் சேர்ந்த 7 வீரர்களின் ஆவணங்கள் தொடர்பான விவகாரத்தைத் தொடர்ந்து அந்த முடிவை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ரத்து செய்து, வியட்நாமுக்கு 3-0 என்ற வெற்றியை வழங்கியது.







