பாகிஸ்தான், 05 அக்டோபர் 2026 : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆதரவாளர்கள் அரசின் எதிர்ப்பையும் மீறி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பிரமாண்ட பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
2022-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான பெரும்பாலான தண்டனைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியினர், அவரை விடுதலை செய்யக் கோரி இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.
இஸ்லாமாபாத்தின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மணல் நிரப்பப்பட்ட பெரிய இரும்புக் கன்டெய்னர்களைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதற்காக, சரக்கு லாரிகள் மற்றும் கன்டெய்னர்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பேரணியை ஒத்திவைப்பது தொடர்பாக அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி முடிவடைந்தன. இதையடுத்து, அக்டோபர் 4-ஆம் தேதி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் வடமேற்கு பாகிஸ்தானின் லக்கி மர்வாட் பகுதியில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணியைத் தொடங்கினர். 5,000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்கத் தொடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கானை அவரது சொந்த மருத்துவர்கள் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும், அவரது குடும்பத்தினரைச் சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர். மேலும், இம்ரான் கானின் சகோதரிகள் கைது செய்யப்பட்ட விவகாரமும் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.
பேரணியை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் தலைநகரில் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது. அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தொடங்கியுள்ள இந்தப் பேரணி, பாகிஸ்தானின் அரசியல் சூழலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







