என் தமிழ்

ஆசிய விளையாட்டுப் போட்டி : மலேசியா 9 தங்கப் பதக்கங்களை குவிப்பு

ஜப்பான், 03 அக்டோபர் 2026 : ஐச்சி–நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசிய அணி இதுவரை 9 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி அரங்கில் மலேசியாவின் திறமையையும், வீரர்களின் கடின உழைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பதக்கங்கள் அமைந்துள்ளன.

ஆடவர் கெய்ரின் பிரிவில் டத்தோ முகமது அஸிசுல்ஹாஸ்னி அவாங் தங்கப் பதக்கத்தை வென்றார். மகளிர் குழு ஸ்குவாஷ் பிரிவில் ஆய்ஃபா அஸ்மான், எஸ். சிவசங்கரி, ஆய்ரா அஸ்மான் மற்றும் ரேச்சல் அர்னால்ட் ஆகியோர் அடங்கிய மலேசிய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

ஆடவர் குழு ஸ்குவாஷ் பிரிவில் ஈன் யோவ், சஞ்சய் ஜீவா, சி. அமீஷென்ராஜ் மற்றும் முகமது சியாஃபிக் கமால் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

மலேசியாவின் தங்கப் பதக்க வேட்டை நாளையும் தொடர உள்ளது. ஆடவர் பேடல் பிரிவில் கிறிஸ்டியன் டிடியர் சின் மற்றும் ஐடன் யூனுஸ் இணையும், ஆடவர் ஹாக்கி அணியும் தங்கப் பதக்கத்துக்காக களமிறங்க உள்ளனர். ஆடவர் ஹாக்கி அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ள நிலையில், மலேசிய வீரர்களின் வெற்றிக்காக ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to Top