ரஷ்யா, 03 அக்டோபர் 2026 : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நல்ல யோசனைகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். வால்டாய் சர்வதேச கலந்துரையாடல் மன்றத்தில் பேசிய புதின், பிரதமர் மோடி தங்களது ஒவ்வொரு சந்திப்பின்போதும் உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாகக் கூறினார்.
மோடி இந்த விவகாரத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகவும், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்குவதற்கான நல்ல யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் புதின் தெரிவித்தார். மேலும், மோதலை அமைதியான வழியில் விரைவில் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ரஷ்யா நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
உக்ரைன் மோதல் தொடர்பாக இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் அமைதியான தீர்வை வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தபோதும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, ரஷ்யாவுடனான சாத்தியமான போர் நிறுத்தத்துக்காக இந்தியா முன்வைத்துள்ள திட்டம் தங்களுக்கு கிடைத்த நான்கு முன்மொழிவுகளில் மிகவும் விரிவானது என்று தெரிவித்துள்ளார். எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் கருங்கடல் பகுதிகளை உள்ளடக்கிய போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.







