பெட்டாலிங் ஜெயா, 03 அக்டோபர் 2026 : மலேசியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான செல்காம் டிஜி பெர்ஹாட் (CelcomDigi Berhad), டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (DNB) நிறுவனத்தின் 5.2 பில்லியன் ரிங்கிட் நிதித் திரட்டல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தனது 5ஜி சேவை நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, டிஎன்பி நிறுவனத்துக்கு 15 ஆண்டுகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கப்பட்டதுடன், மலேசிய நிதி அமைச்சகத்தின் (MoF Inc.) பங்குகளைத் தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னேற்றம் கண்டுள்ளன.
இந்த முன்னேற்றங்கள் நிதி, அலைக்கற்றை மற்றும் உரிமையாளர் கட்டமைப்பு தொடர்பான நீண்டகாலத் தெளிவை வழங்குவதுடன், வலையமைப்புச் செயல்திறனை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான 5ஜி அனுபவத்தை வலுப்படுத்தவும் உதவும் என செல்காம் டிஜி தெரிவித்துள்ளது.
டிஎன்பியின் நிதித் திரட்டல் நிறைவடைந்ததன் மூலம், நிறுவனத்தின் நிதி நிலையும் வலையமைப்பு மேம்பாட்டுக்கான நிதி ஆதாரமும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய ஒழுங்குமுறை மற்றும் நிதித் தேவைகளின் அடிப்படையில், தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குதாரர்களிடமிருந்து கூடுதல் பங்கு முதலீடுகளைப் பெற வேண்டிய அவசியமும் குறையலாம்.
15 ஆண்டுகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நீண்டகால வலையமைப்புத் திட்டமிடல் மற்றும் முதலீடுகளுக்கு உதவும். 200 மெகாஹெர்ட்ஸ் தொடர்ச்சியான நடுத்தர அலைவரிசை அலைக்கற்றையைக் கொண்டுள்ள டிஎன்பி, அதிகரித்து வரும் நுகர்வோர் மற்றும் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அடித்தளத்தைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் வலையமைப்பை நவீனப்படுத்துதல், கட்டடங்களுக்குள் 5ஜி சேவையை விரிவுபடுத்துதல், சேவைப் பரப்பை அதிகரித்தல் மற்றும் அலைக்கற்றையைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
மேலும், நிதி அமைச்சகத்தின் பங்குகள் மாற்றப்பட்டு நடவடிக்கை நிறைவடைந்ததும், தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனங்களின் பங்குதாரர்கள் டிஎன்பியின் மூலோபாய மற்றும் செயல்பாட்டுத் திட்டங்களை வழிநடத்துவதில் அதிக பங்காற்றுவார்கள்.
30 ஆண்டுகளுக்கும் மேலான தொலைத்தொடர்பு அனுபவம், நாடு முழுவதும் பரந்த வலையமைப்புக் கட்டமைப்பு மற்றும் ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, டிஎன்பியின் சேவை விரிவாக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாட்டுக்கு செல்காம் டிஜி ஆதரவளிக்கவுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் மூலம் செலவுத் திறனை மேம்படுத்துதல், 5ஜி சேவையின் பரவலை அதிகரித்தல் மற்றும் கட்டடங்களுக்குள் 5ஜி வசதிகளை விரைவுபடுத்துதல் ஆகியவை சாத்தியமாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.







