என் தமிழ்

தான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் நூற்றாண்டு விழா : நினைவு தபால்தலை வெளியீடு

கோலாலம்பூர், 27 செப்டம்பர் 2026 : ம.இ.கா.வைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவரும், 18 ஆண்டுகள் தேசியத் துணைத் தலைவராகவும், 6 ஆண்டுகள் தேசியத் தலைவராகவும் பணியாற்றிய தான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நினைவுத் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் ம.இ.கா. தலைவரான தான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகத்திற்கான நினைவு தபால்தலையை, தற்போதைய ம.இ.கா. தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வெளியிட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா. தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார்.

சொக்சோவைத் தோற்றுவித்தவர் மற்றும் ம.இ.கா. கல்வி நிதியை உருவாக்கியவர் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரராக தான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் விளங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

ம.இ.கா. தலைவர்களின் தியாகங்களும் சாதனைகளும் எதிர்கால தலைமுறையினருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் தொடக்கமாக இந்த நூற்றாண்டு விழாவும் நினைவுப் பதிவுகளும் அமைகின்றன என்றும் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார்.

இதனிடையே, தான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் நூற்றாண்டு விழா மற்றும் அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்ச்சி வரும் 4 அக்டோபர் 2026 அன்று பிற்பகல் 2 மணிக்கு ஜாலான் ஈப்போ தண்டாயுதபாணி செட்டியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Scroll to Top