என் தமிழ்

பட்ஜெட் 2027 : சிலாங்கூர் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு நிதியைத் தொடர வலியுறுத்தல்

கோலாலம்பூர், 26 செப்டம்பர் 2026 : சிலாங்கூர் மாநிலத்தின் விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனை தொடர்ந்து வலுப்படுத்தும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான நிதி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என சிலாங்கூர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி வலியுறுத்தியுள்ளார்.

2026ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டுப் போட்டி (SUKMA) மற்றும் பாரா SUKMA போட்டிகளில் சிலாங்கூர் அணி ஒட்டுமொத்த சாம்பியனாகத் திகழ்ந்ததை சுட்டிக்காட்டிய அவர், வீரர்களின் பயிற்சி மற்றும் போட்டிக்கான தயாரிப்புகளை தொடர்ந்து மேற்கொள்ள நிதி ஒதுக்கீட்டின் தொடர்ச்சி அவசியம் எனக் குறிப்பிட்டார்.

“விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தற்போதைய அளவிலாவது தக்கவைக்கப்பட வேண்டும். இது வீரர்களின் செயல்திறனை தொடர்ந்து நிலையாக வைத்திருக்க முக்கியமானது,” என அவர் தெரிவித்தார்.

மேலும், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2027 பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதேவேளை, புதிய விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் நோக்கில் ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய ‘சுக்சஸ் சிலாங்கூர்’ விளையாட்டு திறன் தேடல் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், படைப்பாற்றல் தொழில்முனைவு மற்றும் பொருளாதாரத் துறைகளில் இளைஞர்களுக்குப் பயிற்சி, அனுபவம் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் வழங்குவதிலும் மாநில அரசு கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top