பந்திங், 18 செப்டம்பர் 2026 : தெலுக் பங்லிமா காராங் நகரில் கோலாலங்காட் தொகுதி மலேசிய மக்கள் முற்போக்கு கட்சியின் (PPP) அலுவலகம் மற்றும் மக்கள் சேவை மையம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் PPP தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் அலுவலகம் மற்றும் மக்கள் சேவை மையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கோலாலங்காட் தொகுதியில் உள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களுக்கு கிளை மற்றும் தொகுதி நிர்வாகிகள் சிறந்த முறையில் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்றும், மக்கள் சேவை என்பது தேர்தல் காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்படாமல், அனைத்து காலங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் வலியுறுத்தினார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில PPP தலைவர் மு. சுரேந்திரன் பேசுகையில், சிலாங்கூர் மாநிலத்தில் PPP பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று வருவதாக தெரிவித்தார். புதிய அலுவலகம் மற்றும் மக்கள் சேவை மையத்தின் மூலம் கோலாலங்காட் தொகுதி மக்களுக்கு தேவையான சேவைகளை மேலும் சிறப்பாக வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.







