என் தமிழ்

PRU16: கொள்கைகளை நிலைநிறுத்த DAP தயாராக உள்ளது – கோபிந்த் சிங் டியோ

சிலாங்கூர், 14 செப்டம்பர் 2026 : அரசாங்கத்தில் DAP இடம்பெற்றிருப்பதை கட்சியின் சார்புநிலையாகவோ அல்லது பலவீனமாகவோ கருதக்கூடாது என DAP தலைவர்களில் ஒருவரான கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற DAP கோத்தா ராஜா தொகுதியின் நிதி திரட்டும் இரவு விருந்தில் உரையாற்றிய அவர், DAP-ன் எதிர்கால திசை, கட்சியின் செல்வாக்கு மற்றும் மத்திய அரசில் அதன் பங்கு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் DAP-ன் இருப்பு வெறுமனே பதவிக்காக அல்ல என்றும், நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதுடன் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே கட்சியின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

சட்டத்துறை தலைமை வழக்கறிஞர் மற்றும் பொது வழக்கறிஞர் ஆகியோரின் பொறுப்புகளைப் பிரிப்பது, பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு தவணைகளுக்கு மட்டுப்படுத்துவது மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் சமமான தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்வது உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்கு DAP தொடர்ந்து குரல் கொடுக்கும் என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

DAP அமைச்சர்கள் தொழில்முறையுடன் செயல்பட்டு, அரசாங்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

PRU16 எனப்படும் அடுத்த பொதுத்தேர்தலை எதிர்நோக்கும் நிலையில், அரசாங்கத்தில் DAP அளித்துள்ள உறுதிப்பாட்டை கட்சி மதிப்பதாகவும், அதேவேளையில் தங்களது பொறுமையை சார்ந்திருக்கும் நிலையாக யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த பொதுத்தேர்தலில் DAP தனது கொள்கைகளை நிலைநிறுத்தி, நியாயமான, தூய்மையான மற்றும் வளமான மலேசியாவை உருவாக்குவதற்கான தனது பயணத்தைத் தொடரும் என்றும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

Scroll to Top