சீனா, 08 செப்டம்பர் 2026 : சீனா மாஸ்டர்ஸ் 2026 பேட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் ஹூ பாங் ரோன்–லாய் பெய் ஜிங் இணை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இறுதிப்போட்டியில் உலகின் முதல்நிலை ஜோடியான சீனாவின் ஃபெங் யான் ஷே–ஹுவாங் டோங் பிங் இணையை எதிர்கொண்ட பாங் ரோன்–லாய் பெய் ஜிங் 19-21, 16-21 என்ற புள்ளிக்கணக்கில் 50 நிமிடங்களில் தோல்வியடைந்தனர். இதன் மூலம் சீன ஜோடி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
பாங் ரோன்–லாய் பெய் ஜிங் இணைக்கு இது உலகச் சுற்றுப் போட்டிகளில் கிடைத்துள்ள சிறந்த சாதனையாகும். கடந்த மார்ச் மாதம் புதிய இணையாக களமிறங்கிய இருவரும், சீனா மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தங்களது திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
உலகின் முதல்நிலை ஜோடியை எதிர்கொண்ட இறுதிப்போட்டியில் வெற்றியைப் பெற முடியாவிட்டாலும், பாங் ரோன்–லாய் பெய் ஜிங் இணை முழுமையாகப் போராடியதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தச் சாதனையைத் தொடர்ந்து, இருவரும் தங்களது இணக்கத்தையும் ஆட்டத்தையும் மேலும் மேம்படுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







