என் தமிழ்

ஐ.நா. தீர்மானம் : நவம்பர் 27 சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினமாக அறிவிப்பு

நியூயார்க், 07 செப்டம்பர் 2026 : குழந்தைத் திருமணம், இளம் வயது திருமணம் மற்றும் கட்டாயத் திருமணத்தை ஒழிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதியை சர்வதேச தினமாகக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் செப்டம்பர் 4ஆம் தேதி இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சியாரா லியோன் முன்வைத்த இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 65-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

குழந்தை, இளம் வயது மற்றும் கட்டாயத் திருமணங்களை 2030ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

நவம்பர் 27ஆம் தேதிக்கு இந்தியாவுடன் சிறப்புத் தொடர்பும் உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு இதே நாளில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ‘குழந்தை திருமணம் இல்லாத இந்தியா’ என்ற பிரசாரத்தைத் தொடங்கியது. இதனால், இந்தத் தேதியின் தேர்வு இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறைந்து வந்தாலும், பிரச்சினை இன்னும் கவலைக்குரியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 20.1 சதவீதம் பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Scroll to Top