செர்டாங், 07 செப்டம்பர் 2026 : Malaysia Agro Exposition Park Serdang (MAEPS) வளாகத்தில் நடைபெற்ற MAHA 2026 வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலாக் கண்காட்சி இன்று நிறைவடைந்தது. இக்கண்காட்சி 4.30 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்ததுடன், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மூலம் RM10.35 பில்லியன் மதிப்பிலான வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளையும் பதிவு செய்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் வளர்ச்சியில் வேளாண்மைத் துறை தொடர்ந்து முக்கியத் தூணாக விளங்குவதாகத் தெரிவித்தார். டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI), நவீன தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி மாற்றம் ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் நிலையிலும், அவற்றுடன் வேளாண்மைத் துறை தொடர்ந்து இணைந்து முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அக்டோபரில் தாக்கல் செய்யப்படவுள்ள தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதனிடையே, செப்டம்பர் 5ஆம் தேதி வரை MAHA 2026 கண்காட்சிக்கு 4.30 மில்லியன் பேர் வருகை தந்துள்ளதாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்தார். இவர்களில் 1.72 மில்லியன் பேர் இளைஞர்கள் ஆவர். மேலும், 854,311 வாகனங்கள் கண்காட்சி வளாகத்திற்கு வந்துள்ளதுடன், மலேசியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
கண்காட்சியின் மொத்த விற்பனை மதிப்பு RM66.88 மில்லியனை எட்டியுள்ளது. 14 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றதன் மூலம், தொழில்நுட்பப் பரிமாற்றம், முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் மலேசிய வேளாண் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதற்கான சர்வதேச தளமாகவும் MAHA 2026 அமைந்துள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டில் வேளாண் உணவுத் துறையின் ஏற்றுமதி 8.1 சதவீதம் அதிகரித்து RM58.8 பில்லியனை எட்டியுள்ள நிலையில், இறக்குமதி 1.1 சதவீதம் குறைந்து RM92.7 பில்லியனாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் அத்துறையின் வர்த்தகப் பற்றாக்குறை RM5.4 பில்லியன் அல்லது 13.8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், MAHA 2026-இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், தொழில்நுட்பக் கூட்டாண்மைகள் மற்றும் உருவாக்கப்பட்ட புதிய வாய்ப்புகள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, அதன் பலன்கள் விவசாயிகள், தோட்டக்காரர்கள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் மற்றும் நுகர்வோரை சென்றடைய வேண்டும் என அமைச்சர் முகமது சாபு வலியுறுத்தினார்.







