கோலாலம்பூர், 06 செப்டம்பர் 2026 : ஓமன் நாட்டின் மஸ்கட்டில் நடைபெற்ற ‘ஓமன் தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2026’ போட்டியில் மலேசியாவின் 4×100 மீட்டர் மகளிர் ஓட்டக் குழு தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளது. அஸ்ரீன் நபிலா, இஸ்ஸாத்துல் முஸ்பிரா, நூருல் வார்ததுல் ஹுவைடா மற்றும் நூர் ஆயிஷா ரோஃபினா ஆகியோர் இடம்பெற்ற மலேசிய அணியினர் 46.07 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தனர்.
உலக தடகளக் கூட்டமைப்பின் கண்டங்களுக்கு இடையிலான வெண்கலத் தரப் போட்டியான இதில், குவைத் அணி 49.81 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தையும், ஷார்ஜா அணி 51.19 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அரங்கில் மலேசியாவின் தேசியக் கொடியான ஜலூர் ஜெமிலாங் உயரப் பறந்தது. மேலும், உலகளவில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் மலேசிய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு இந்த வெற்றி ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







