கம்போங் காயூ ஆரா, 02 செப்டம்பர் 2026 : கம்போங் காயூ ஆரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றை சுமந்து, இவ்வட்டார இந்து மக்களுக்கு தொடர்ந்து அருள்பாலித்து வருகிறது.
1910களில் டமன்சாரா தோட்டத்தில் உருவான இவ்வாலயம், அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் விநாயகர், முருகன், முனியாண்டி, முனீஸ்வரன் உள்ளிட்ட தெய்வங்களும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆண்டுதோறும் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தன.
1970களில் டமன்சாரா தோட்டம் மேம்பாட்டுத் திட்டத்துக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் உட்சவ மூர்த்தி 1973ஆம் ஆண்டு அமரர் கெ.வி.எஸ். மணியம் உள்ளிட்டோரின் முயற்சியால் கம்போங் காயூ ஆராவுக்கு கொண்டு வரப்பட்டு, தற்காலிக ஆலயம் அமைக்கப்பட்டது.


பின்னர் 1981ஆம் ஆண்டு கம்போங் காயூ ஆரா பகுதியில் ஆலயத்திற்காக 36,000 சதுர அடி நிலம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் தற்போதைய ஆலய நிலத்தில் குடியமர்த்தப்பட்டார். ஆலயத்தின் வளர்ச்சியில் அமரர் நா. பெருமாள் பி.ஜி.கே. முக்கிய பங்காற்றினார். 1989ஆம் ஆண்டு முதல் பெரிய ஆலயம் அமைக்க வேண்டும் என்ற முயற்சியை முன்னெடுத்து, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து வழிநடத்தினார். பலரின் ஒற்றுமையான பங்களிப்புடன் ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
தற்போது 115 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இவ்வாலயம் மேலும் சிறப்புறும் வகையில் முதலாம் மகா கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆலய கட்டுமானம் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போது திரு. வ. அண்ணாமலை ஆலயத் தலைவராக பொறுப்பேற்று நிர்வாகத்தை வழிநடத்தி வருகிறார். ஆலய நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றி வரும் அமரர் நா. பெருமாள் பி.ஜி.கே. அவர்களின் புதல்வர் திரு. பெ. அண்ணாதுரை, மகா கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்துவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறார். எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் கம்போங் காயூ ஆரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







