என் தமிழ்

திருமுறைகள் அடுத்த தலைமுறையின் வாழ்வியல் நெறியாக வேண்டும் : 48வது தேசிய திருமுறை ஓதும் விழாவில் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சிறப்புரை

கோலாலம்பூர், 02 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 48வது தேசிய திருமுறை ஓதும் விழாவில் ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் சிறப்புரையாற்றினார்.

தமிழ்ச் சைவ மரபின் பெருமையையும், திருமுறைகளின் ஆன்மிகச் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பணியை மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்தார். “திருவாசகத்திற்கு உருகாதார், ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிய அவர், திருவாசகம் மனிதர்களின் உள்ளங்களை பக்தி, அன்பு மற்றும் இரக்கத்தால் நெகிழச் செய்யும் வல்லமை கொண்டது என்றார்.

திருமுறைகள் வெறும் ஓதப்படும் பாடல்களாக மட்டும் இல்லாமல், வாழ்வியல் நெறியாகவும், பண்பாட்டு அடையாளமாகவும், ஆன்மிகப் பாதையாகவும் அடுத்த தலைமுறையினரிடம் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற புதிய அணுகுமுறைகளையும் சிந்தனைகளையும் உருவாக்கி, சமயத்தையும் பண்பாட்டையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமயக் கல்வி இல்லங்களில் தொடங்கி, ஆலயங்களில் தொடர்ந்து வளர்ந்து, சமூக நிகழ்வுகள் வழியாக நிலைத்து நிற்க வேண்டும். அதன் மூலமே சமயம், பண்பாடு, தமிழ் மொழி மற்றும் மரபு ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்க முடியும் என்றார்.

திருமுறைகளை ஓதுவதோடு நின்றுவிடாமல், அவற்றில் கூறப்படும் அன்பு, அறம், இரக்கம் மற்றும் ஒற்றுமை போன்ற நற்பண்புகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து சமூகத்தில் வளர்ப்பதே இவ்விழாவின் உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார்.

48வது தேசிய திருமுறை ஓதும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த மலேசிய இந்து சங்கத்திற்கும், இதில் பங்கேற்று திருமுறைப் பாடல்களை ஓதிய மாணவர்கள், இளைஞர்கள், பக்தர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கும் அவர் பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Scroll to Top