தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். இசைக் குடும்பத்தில் பிறந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்
அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அண்ணாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.






