பினாங்கு, 26 ஆகஸ்ட் 2026 : பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதி பெண்கள் மேம்பாட்டுக் குழு சார்பில், மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மகளிர் பிரிவுடன் இணைந்து பெண்கள் அதிகாரமளிப்பு மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பட்டர்வொர்த் டிஜிட்டல் நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் பெண்களுக்கு தங்களது விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பாலினப் பாகுபாடு, கல்வி சார்ந்த பாகுபாடு, இனப் பாகுபாடு உள்ளிட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை எதிர்கொண்டு முன்னேறுவதற்கான வழிமுறைகளும் பகிரப்பட்டன.
மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் மற்றும் மகளிர் தலைவி விவேக ரத்னா நளினி தேவி டிஜேஎன், பிகேடி மற்றும் மகளிர் பிரிவு உறுப்பினர்கள் ஐவர் கலந்து கொண்டனர். பெண்களின் திறமைகள் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள், சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.







