கெய்ரோ, 26 ஆகஸ்ட் 2026 : அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அண்டை நாடான ஓமானுடன் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்று வந்த நிலையில், பிப்ரவரி மாதம் தொடங்கிய போருக்குப் பின்னர் இந்த நீர்வழிப் பாதையில் பெரும்பாலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நீரிணை வழியாக “தற்காலிக கூட்டு கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை” ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்ததுடன், நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றவும் ஒப்புக்கொண்டன.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
செவ்வாய்க்கிழமை ஓமன் நாட்டின் ஆஷ் ஷிஷா கடற்கரை அருகே, அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது பொருளால் எண்ணெய் கப்பல் ஒன்று தாக்கப்பட்டு செயலிழந்ததாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், அந்நாட்டுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதேவேளை, ஈரானுடனான மோதல் உடனடியாக தீவிரமடையும் அபாயம் குறைந்துள்ளதாகக் கருதும் அமெரிக்கா, மத்திய கிழக்கில் குறைக்கப்பட்டிருந்த சில தூதரகப் பணிகளை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.







