கோலாலம்பூர், 25 ஆகஸ்ட் 2026 : மலேசிய ரிங்கிட் திங்கள்கிழமை காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் மற்றும் பல முக்கிய நாணயங்களுக்கு எதிராக உயர்வுடன் தொடங்கியது. மலேசியாவின் வலுவான பொருளாதாரத் தரவுகள் ரிங்கிட்டுக்கு ஆதரவாக இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலை 8.05 மணியளவில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட் 4.0360/4.0410 ஆக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இது 4.0365/4.0405 ஆக இருந்தது.
Bank Muamalat Malaysia Bhd-ன் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்சானிசாம் அப்துல் ரஷீத், ஜூலை மாத ஏற்றுமதி உள்ளிட்ட சாதகமான பொருளாதாரத் தரவுகளின் காரணமாக ரிங்கிட் குறுகிய காலத்தில் தொடர்ந்து ஆதரவைப் பெறும் என தெரிவித்தார்.
இரண்டாம் பாதியில் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட சிறப்பாக அமையக்கூடும் என்றும் அவர் கூறினார். அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் RM4.03 முதல் RM4.05 வரையிலான நிலையில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் யூரோ ஆகியவற்றுக்கு எதிராகவும் ரிங்கிட் உயர்ந்தது. பிராந்திய நாணயங்களில் சிங்கப்பூர் டாலர் மற்றும் இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராகவும் ரிங்கிட் வலுப்பெற்றது. அதேவேளை, தாய்லாந்து பாட் நாணயத்திற்கு எதிராக ரிங்கிட் சற்று சரிந்தது.
வரும் ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஜாக்சன் ஹோல் மாநாட்டில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவார்கள் என்றும், செப்டம்பர் மாத அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டி விகிதம் தொடர்பான அடுத்தகட்ட முடிவுகளுக்கான அறிகுறிகள் கிடைக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர் தெரிவித்தார்.







