23 ஆகஸ்ட் 2026 : 2026ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ‘தோகோ நிலாம்’ விருது வழங்கும் விழாவில், கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த வட்சாரா வி. குமரன் என்ற மாணவி தொடக்கப்பள்ளி பிரிவுக்கான ஆங்கில மொழி ‘சிறந்த வாசகர்’ போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வட்சாரா வி. குமரன் கடந்த ஜூலை 29ஆம் தேதி இணையவழியில் நடைபெற்ற மதிப்பீட்டில் பங்கேற்றார். இதில் சிறப்பாகச் செயல்பட்ட அவர், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய ‘தோகோ நிலாம்’ பட்டத்தைப் பெறுவதற்கான இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவராக இடம்பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரை நான்கு இரவுகள், ஐந்து நாட்கள் நடைபெற்ற இறுதிக்கட்ட மதிப்பீட்டில் அவர் பங்கேற்றார். சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள ஜெனோ ஹோட்டலில் நடைபெற்ற இந்த மதிப்பீட்டில் சிறுகதை எழுதுதல், கதை சொல்லுதல், படத் தொகுப்பு மற்றும் திருத்தம், நடுவர் குழுவினருடனான நேர்காணல் என நான்கு கட்டங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
இதன் நிறைவாக, ஆகஸ்ட் 20ஆம் தேதி ஜெனோ ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், வட்சாரா வி. குமரன் 2026ஆம் ஆண்டுக்கான தொடக்கப்பள்ளி பிரிவின் ஆங்கில மொழி ‘சிறந்த வாசகர்’ போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்தச் சாதனைக்காக மாணவிக்கு வழிகாட்டியாக இருந்து பயிற்சி அளித்த ஆசிரியை எஸ்வரி ஜெயபாலன் மற்றும் கல்வி வளங்கள் மற்றும் கல்வித் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்சாராவின் இந்த வெற்றி, மற்ற மாணவர்களும் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு, தங்களது திறமைகளை தேசிய அளவிலான போட்டிகளில் வெளிப்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







