கோலாலம்பூர், 23 ஆகஸ்ட் 2026 : மலேசியாவின் தேசிய தினம் மற்றும் மலேசியா தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, JAPEN சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘PENTARAMA Merdeka@HOHO’ சிறப்பு நிகழ்ச்சி நேற்று இரவு கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. KL Hop-On Hop-Off (KL HOHO) இரட்டை அடுக்கு பேருந்தில் நடைபெற்ற இந்தச் சிறப்பு நகரச் சுற்றுப்பயணத்தில் JAPEN தலைமை இயக்குநர் எர்வின் கைருல் அஹ்மத் கலந்து கொண்டார்.
இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக SOGO KL, பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் Pavilion KL உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தேசப்பற்று பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகள், HKHM 2026 தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தேசப்பற்று செய்தியை நேரடியாகக் கொண்டு செல்வதுடன், ‘1 Rumah 1 Jalur Gemilang’ (1R1JG) பிரச்சாரத்தை வலுப்படுத்துவதும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வில் JAPEN-ன் தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் சமூக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் ஹாஜி முஹம்மது நஜ்மி முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்களுக்கு நெருக்கமான மற்றும் எளிமையான முறையில் தேசப்பற்று உணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, HKHM 2026 கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.







