என் தமிழ்

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார்கள் தேவையில்லை : உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, 21 ஆகஸ்ட் 2026 : தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ.க்களும் அந்த அரசு வாகனங்களைப் பெறப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், தேவையற்ற அரசுச் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவித்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், திமுகவைச் சேர்ந்த அனைத்து 59 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்ட ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொருளாதார ரீதியாக நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் அரசு கார் வழங்கலாம் என்றும் உதயநிதி வலியுறுத்தினார்.

முன்னதாக, பொருளாதார வசதி குறைந்த மற்றும் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களது மக்கள் பணியை மேற்கொள்ள வசதியாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.

அரசு வழங்கும் வாகனத்திற்கான ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக மாதம் ரூ.75,000 வாகனப் படியும், அலுவலகப் பணிகளுக்காக உதவியாளர் ஒருவரை நியமிக்க மாதம் ரூ.25,000 உதவியாளர் படியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.க்களின் முடிவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் சுமார் 3 லட்சம் மக்களை நேரில் சந்திக்க வேண்டியிருப்பதால், அவர்களின் பணிகளுக்காகவே அரசு வாகனம் வழங்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

Scroll to Top