சிலாங்கூர், 21 ஆகஸ்ட் 2026 : இந்தோனேசியாவில் மலேசியாவின் மத்திய நில மேம்பாட்டு ஆணையமான FELDA மேற்கொண்டுள்ள முதலீடு தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க உதவுமாறு, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவிடம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறிப்பாக, இந்த விவகாரம் PT Eagle High Plantations Tbk (EHP) நிறுவனத்தில் FELDA மேற்கொண்ட முதலீட்டைச் சுற்றி எழுந்துள்ளது. இந்த வழக்கு தற்போது இந்தோனேசிய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், EHP நிறுவனத்தின் பங்குகளை 505 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய விவகாரத்தில் மோசடி நடைபெற்றதாகக் கூறி FELDA காவல்துறையில் புகார் அளித்திருந்தது. இந்தப் பங்கு பரிவர்த்தனை தொடர்பாக FELDAக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டு விவகாரம் முறையாகத் தீர்க்கப்படாவிட்டால் சுமார் 2.5 பில்லியன் அளவுக்கு இழப்பு ஏற்படக்கூடும் என்றும், மறுபுறம் சுமார் 200 மில்லியன் அளவிலான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, FELDA-வின் நிர்வாகம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்புப் பணிக்குழு தனது முழுமையான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
FELDA-வின் தற்போதைய நிர்வாக நிலை, எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அந்தப் பணிக்குழு ஆய்வு செய்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தோனேசியாவில் உள்ள FELDA முதலீட்டு விவகாரத்திற்கு தீர்வு காணவும், FELDA-வின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.







