என் தமிழ்

குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் : ரமணன் ராமகிருஷ்ணன்

கோலாலம்பூர், 17 ஆகஸ்ட் 2026 : 2026 தேசிய KEADILAN மாநாட்டை முன்னிட்டு, கட்சித் தலைமையுடன் இணைந்து தலைவர் உரை தொடர்பான கலந்துரையாடலில் ரமணன் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். கலந்துரையாடலில் பேசிய அவர், மக்களின் குரலை திறந்த மனதுடன் கேட்பது அவசியம் என்றும், அதன் மூலமே கட்சியின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை கண்டறிந்து அவற்றைச் சரிசெய்து மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

அடிமட்டத்திற்குச் சென்று மக்களின் கவலைகள் மற்றும் தேவைகளை நேரடியாகப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேவேளை, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மக்களிடம் அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து தெளிவான விளக்கங்களை தொடர்ந்து வழங்குவதும் முக்கியம் என ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். MADANI அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுத்தாலும், அவற்றை மக்கள் அறிந்து, புரிந்துகொண்டு, அதன் பயனை உணராவிட்டால், அந்த முயற்சிகள் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை என்றே பொருள் என அவர் தெரிவித்தார்.

எனவே, அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த தகவல்கள் அடிமட்ட மக்கள் வரை தொடர்ந்து கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்களின் குரலைக் கேட்பது, குறைகளைச் சரிசெய்வது, உண்மைகளைத் தெளிவாக எடுத்துரைப்பது மற்றும் MADANI அரசாங்கத்தின் சாதனைகள் மக்களால் உணரப்படுவதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பு என்றும் ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதிலும் இருந்து மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் மாநாடு சுமூகமாக நடைபெறுவதற்கு அயராது பணியாற்றிய தன்னார்வலர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Scroll to Top