கோலாலம்பூர், 16 ஆகஸ்ட் 2026 : மலேசிய வானொலி தொலைக்காட்சியின் (RTM) MINNALfm, உள்ளூர் இந்தியப் படைப்பாற்றல் துறையை வலுப்படுத்தும் நோக்கில் “உள்ளூர் இந்தியப் படைப்பாற்றல் துறையை மேம்படுத்தும் நிகழ்ச்சி” மற்றும் MINNALfm புதிய பாடல் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சி ஜூலை 25ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள அங்காசாபுரி கோத்தா மீடியாவில் அமைந்துள்ள விஸ்மா ரேடியோவின் பி. ராம்லி அரங்கில் நடைபெற்றது. மலேசிய இந்தியக் கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், திரைப்பட மற்றும் ஊடகத் துறையினர் உள்ளிட்ட உள்ளூர் படைப்பாளர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களுக்கான வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, படைப்பாற்றல் துறையுடன் தொடர்புடைய பல்வேறு அரசு மற்றும் நிறுவனங்கள் சிறப்பு தகவல் அரங்குகளை அமைத்திருந்தன. MYIPO, FINAS, MYCV மற்றும் IPPTAR உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்று, அறிவுசார் சொத்துரிமை, பதிப்புரிமை, வர்த்தக முத்திரை பதிவு, திரைப்படம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், நிதியுதவி, தொழில்முனைவு, ஊடகப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கின.



இதன் மூலம் கலைஞர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து, தங்களது படைப்புகளைப் பாதுகாப்பது, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள், நிதியுதவி மற்றும் பயிற்சி திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
மேலும், நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக MINNALfm-இன் புதிய பாடலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் MINNALfm-இன் புதிய அடையாளத்தையும், நேயர்களுடனான நெருக்கமான உறவையும், உள்ளூர் இந்தியப் படைப்பாற்றல் திறமைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் அதன் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
உள்ளூர் இந்தியக் கலைஞர்களின் படைப்புகளை பரந்த அளவிலான ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், அவர்களின் கலைப் பயணத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும் MINNALfm தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது.






