08 ஆகஸ்ட் 2026 : கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தி ஒடிஸி’ திரைப்படம் உலகளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ.9,500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. கிரேக்க இலக்கியத்தின் புகழ்பெற்ற ‘ஒடிசி’ காவியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், டிரோஜன் போருக்குப் பின்னர் மன்னன் ஒடிசியஸ் தனது நாட்டுக்குத் திரும்பும் பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களை கதைக்களமாகக் கொண்டுள்ளது.
சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வெளியான முதல் வாரத்திலேயே இப்படம் சுமார் 364 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்த நிலையில், தற்போது உலகளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலைக் கடந்துள்ளது.
இதன் மூலம் நோலன் இயக்கிய ‘தி டார்க் நைட்’, ‘தி டார்க் நைட் ரைசஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் கிளப்பில் இணைந்த அவரது மற்றொரு திரைப்படமாக ‘தி ஒடிஸி’ உருவெடுத்துள்ளது.






