என் தமிழ்

டாமன்சாராவில் 700 பேருக்கு AI திறன் பயிற்சி: கோபிந்த் சிங் டியோ

08 ஆகஸ்ட் 2026 : மலேசிய இளைஞர்களை எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தைக்கு மேலும் போட்டித்திறன் கொண்டவர்களாக உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை வளர்ப்பது முக்கியமானது என டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

டாமன்சாராவில் நடைபெற்ற MyMahir TalentCorp AI Journey திட்டத்தின் மூலம் 700 பேர் AI தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகளை நேரடியாக அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்புச் சந்தை வேகமாக மாறி வரும் நிலையில், புதிய திறன்களும் புதிய வேலைப் பொறுப்புகளும் உருவாகி வருவதாக குறிப்பிட்ட அவர், வயது அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும் அனைவரும் AI வளர்ச்சியால் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Kementerian Digital, TalentCorp Malaysia, EY மற்றும் டாமன்சாரா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ‘AI at Your Fingertips’ எனும் நடைமுறை AI திறன் பயிற்சி முதல் தொழில் மேம்பாடு, பணியிடங்களில் AI பயன்பாடு, உற்பத்தித்திறன், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PKS) மற்றும் தொடர்ச்சியான கற்றல் வரை பல்வேறு அம்சங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

அறிவு, திறன் மற்றும் தனிநபர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை இணைப்பதன் மூலம் AI வளர்ச்சியின் பலன்களை அனைத்து தரப்பினரும் அனுபவிக்க முடியும் என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை AI நாடாக உருவாக்கும் இலக்கிற்கு ஏற்ப, AI வளர்ச்சியின் பலன்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Scroll to Top